ஒரு வினைமுற்றுச் சொல், அது உணர்த்தும் பொருளுக்கு ஏற்ப, ஏவல் வினை, வியங்கோள் வினை என்ற பெயர்களால் குறிக்கப்படுகிறது.
ஏவல் வினை
முன்னிலையில் உள்ள ஒருவரையோ அல்லது பலரையோ ஒரு செயலைச் செய்யுமாறு கட்டளை இடுவதற்குப் பயன்படும் வினை ஏவல் வினை எனப்படும். ஒருவரை ஒரு வினை செய்யுமாறு கட்டளை இடுவதை ‘ஏவல்’ என்கிறோம்.
எ.கா:
1. வா 3. நில் 5. நீ வாராய்
2. போ 4. செல் 6. நீ செல்வாய்
ஏவல் வினை இரண்டு வகைப்படும்.

ஏவல் ஒருமை
ஏவல் பன்மை
1.ஏவல் ஒருமை
ஏவல் ஒருமை வினைச் சொற்கள் இரண்டு வகைப்படும். அவை:
1.1 உடன்பாட்டு ஏவல் ஒருமை
1.2 எதிர்மறை ஏவல் ஒருமை
1.1 உடன்பாட்டு ஏவல் ஒருமை
பொதுவாக வினையடிகளே உடன்பாட்டு ஏவல் ஒருமை வினைகளாக காணப்படுகின்றன.
எ.கா:
1. பாடு
2. நட
3. செல்
மேலும் இவை ஆய், இ, அல், ஏல், ஆல் ஆகிய விகுதிகள் பெற்றும் வரும். கீழே உள்ள எடுத்துக்காட்டைப் பார்க்கவும்.
எ.கா:
1.பாடுவாய் (ஆய்)
2.உண்ணல் (அல்)
3.உண்ணேல் (ஏல்)
4.உண்ணுதி (இ)
5.மறால் ( மறுக்காதே ) (ஆல்)
1.2 எதிர்மறை ஏவல் ஒருமை
முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி எதிர்மறை பொருளில் கட்டளை இடுவது எதிர்மறை ஏவல் ஒருமை வினைமுற்று எனப்படும். 'ஆத்' என்னும் இடைநிலையும் 'ஏ' கார விகுதியும் பெற்று எதிர்மறை ஏவல் ஒருமை வினைகள் வரும்.
எ.கா:
1 . வராதே = வா + ஆத் + ஏ
2 . செல்லாதே = செல் + ஆத் + ஏ
3 . போகாதே = போ + ஆத் + ஏ
4. தீமையைத் தேடாதே
5. பயனிலாச் சொல் சொல்லாதே
2. ஏவல் பன்மை
ஏவல் பன்மை வினைச் சொற்களானது 2 வகைப்படும் அவை,
2.1 உடன்பாட்டு ஏவல் பன்மை
2.2 எதிர்மறை ஏவல் பன்மை
2.1 உடன்பாட்டு ஏவல் பன்மை
ஒரு செயலைச் செய்யுமாறு பலரை நோக்கி உடன்பாட்டு பொருளில் கட்டளை இடுமாறு கூறுவது உடன்பாட்டு ஏவல் பன்மை எனப்படும். இதில் 'உங்கள்', 'ங்கள்' ஆகிய ஏவல் பன்மை விகுதிகள் இடம் பெற்றிருக்கும்.
இவை ‘உங்கள்’, ‘ங்கள்’ ஆகிய ஏவல் பன்மை விகுதிகளுடன் இடம்பெறும்.
எ.கா:
1. பாடுங்கள் = பாடு + ங்கள்
2 . செல்லுங்கள் = செல் + உங்கள்
இதைப்போலவே ஈர், உம், மின் என்னும் விகுதிகளையும் பெற்று ஏவல் பன்மை வினை இடம்பெறும்.
எ.கா:
1 . உண்ணீர் = உண் + ஈர்
2 . செல்லும் = செல் + உம்
3 . காண்மின் = காண் +மின் (காணுதல்)
4. இனிதினும் இனிது கூறுங்கள்.
5. நன்மையைத் தேடி செல்லுங்கள்
2.2 எதிர்மறை ஏவல் பன்மை
செயலைச் செய்யுமாறு பலரை நோக்கி எதிர்மறை பொருளில் கட்டளை இடுமாறு கூறுவது எதிர்மறை ஏவல் பன்மை வினை எனப்படும்.
எதிர்மறை ஏவல் பன்மை வினை 'ஈர்கள்' என்னும் முன்னிலைப் பன்மை விகுதியுடன் பிறக்கின்றது.
எ.கா:
1 . ஓடாதீர்கள் = ஓடு + ஆத் + ஈர்கள்
2 . செல்லாதீர்கள் = செல் + ஆத் + ஈர்கள்
3. பொறுமை இழக்காதீர்கள்.
4. உணவை வீணாக்காதீர்கள்.
2.வியங்கோள் வினை
‘வாழ்த்துதல், வைதல், வேண்டுதல், விதித்தல் ஆகிய பொருளில் வருவது வியங்கோள் வினைமுற்று ஆகும். 'வியம்' + 'கோள்' என்னும் இரண்டு சொற்கள் இணைந்து வியங்கோள் ஆனது.
எ.கா:
1. வாழ்தல் - வாழ்க, வெல்க
2. வைதல் - ஒழிக, வீழ்க
3. வேண்டுதல் - அருள்க, கருணை புரிக
4. விதித்தல் - அமர்க, வருக
வியங்கோள் வினை க, இய, இயர் என்னும் விகுதிகளை பெற்று வரும்.
எ.கா:
1.வாழ்க = வாழ் + க
2.வாழிய = வாழ் + இய
3.வாழியர் = வாழ் + இயர்
வியங்கோள் வினைமுற்று, அஃறிணை மற்றும் உயர்திணை என இரண்டு திணைகளுக்கும், தன்மை, முன்னிலை மற்றும் படர்க்கை என மூவிடங்களுக்கும், ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால் மற்றும் பலவின் பால் என ஐம்பாலுக்கும் பொதுவாக அமையும். வியங்கோள் வினைமுற்று ஒருமை பன்மை வேறுபாடின்றி இருக்கும்.
எ.கா:
அவர்கள் வாழ்க
நீ வாழ்க
நீங்கள் வாழ்க
எனக்கு அருளுக
2.1எதிர்மறை வியங்கோள் வினை
வாழ்தல், வைதல், வேண்டல், விதித்தல் போன்றவற்றை உணர்த்தி எதிர்மறை பொருளில் வரும் சொற்களை எதிர்மறை வியங்கோள் வினை எனப்படும்.
எ.கா:
வாரல்
செல்லற்க
ஏவல் வினை , வியங்கோள் வினை வேறுபாடு:
