அடுக்குத்தொடர்கள்
ஒரு சொல் உணர்த்தும் பொருளை அழுத்தமாகக் கூறுவதற்கு அதேசொல் மீண்டும் வருவது
(அடுக்கி வருவது) அடுக்குத்தொடர் எனப்படும்.
இச்சொற்கள் தனித்து நின்றும் பொருள் தரக்கூடியவை.
“அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும் “ - தமிழ் இலக்கிய நூலூன நன்னூலில் குறிப்பிடப்பட்டுள்ள அடுக்குத்தொடருக்கான சூத்திரம்
இதற்கமைய நன்னூலின் படி அடுக்குத்தொடரை மூன்று வகைப்படுத்தலாம்.
1.அசைநிலை அடுக்குத்தொடர்
2.பொருள் நிலை அடுக்குத்தொடர்
3.இசைநிறை அடுக்குத்தொடர்
அசைநிலை அடுக்குத்தொடர்
ஒரு பெயர்ச் சொல்லையோ, வினைசொல்லையோ சார்ந்து, (சில வாக்கியங்களில் இரண்டையுமே சார்ந்து கூட வரும், ) இரு முறை ஒரு சொல் தொடர்ந்து வரும் அடுக்குத்தொடரானது 'அசைநிலை அடுக்குத்தொடர் ' எனப்படும் .
எடுத்துக்காட்டு - மணமக்கள் வாழிய வாழிய ,
இங்கு மணமக்கள் பெயர்ச்சொல் ஆகும்
பொலிக ! பொலிக ! பொலிக ! போயிற்று ,
போயிற்று இங்கு வினைச்சொல் ஆகும்
பொருள் நிலை அடுக்குத்தொடர்
உணர்ச்சிகளைக் குறிக்கும் நோக்கில் அமையும் அடுக்குத்தொடர் பொருள்நிலை அடுக்குத்தொடர் எனப்படும் .
அச்சம் (பயம்) -(எ-டு ) தீத்தீ , பாம்பு பாம்பு, ஓடுங்கள் ! ஓடுங்கள் ! "
வெகுளி - (எ-டு ) விடு ,விடு,விடு
உவகை (மகிழ்ச்சி) - (எ-டு ) வாருங்கள் ! வாருங்கள் ! ,
அவலம்- (பரிதாபம்) - (எ-டு ) ஐயகோ ! ஐயகோ ! , வீழ்ந்தேன் வீழ்ந்தேன் .
விரைவு(அவசரம் ) - (எ-டு ) போ போ
இசைநிறை அடுக்குத்தொடர்
ஓசைக்காக நிரப்புவதற்கென்று, ஒரே சொல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவது 'இசைநிறை' (இசையை நிரப்புவது) அடுக்குத்தொடர் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள் -
" உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல் மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே - மனோன்மணீயம் பெ. சுந்தரனார்
(மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல்)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு " - பெரியாழ்வார்
வாழ்க நிரந்தரம் ,
வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே ! - பாரதியார்
"தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா - காதல் மழையே ! காதல் மழையே ! " என்ற திரைப்பட பாடல் வரிகள்
ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
உன் சிலை அழகை
விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சிண்ட்ரெல்லா
வாராயோ வாராயோ காதல்கொள்ள
பூவோடு பேசாத காற்றே இல்ல
ஏனிந்த காதலோ நேற்றே இல்ல - என்ற திரைப்பட பாடல் வரிகள்
குறிப்பு- இலக்கியச் சான்றுகளை காட்டிலும் திரைப்பட பாடல்கள் மூலம் சிலருக்கு எளிதில் இந்த இலக்கணப்பகுதியை மனனம் செய்யக்கூடியதாக இருக்கும் என்ற நோக்கத்திலே இங்கு திரைப்பட பாடல் வரிகள் எடுத்துக்காட்டுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது