இரண்டு சொற்களை ஒன்றோடொன்று சேர்ப்பதே சொற்புணர்ச்சி எனப்படும். சொற்புணர்ச்சி நிலைமொழியின் இறுதி எழுத்தை அடிப்படையில் கொண்டு, உயிரீற்றுப் புணர்ச்சி மற்றும் மெய்யீற்றுப் புணர்ச்சி என இரண்டாக வகுக்கப்படும். அவ்வாறு நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாக (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள) இருந்தால், அது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். இதில் நிலைமொழி முதலாவது சொல்லையும் வருமொழி இரண்டாவது சொல்லையும் குறித்து நிற்கும்.

உயிர்முன் உயிர் புணர்தல் (உயிர் + உயிர்)
நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்து வந்தால், அதை உயிர்முன் உயிர் புணர்தல் என்று கூறுவார். ஆனால் இவ்வாறு வந்தமையும் சொற்கள் இயல்பாக புணர்வதில்லை என்பதனால், இடையில் ய் அல்லது வ் என்ற மெய்யெழுத்துக்கள் பயன்படுத்தப்படும். (இவற்றை உடம்படுமெய் என்று குறிப்பார்.)
நிலைமொழியின் இறுதி எழுத்தாக இ, ஈ அல்லது ஐ வந்து, வருமொழியுடன் புணரும்போது, இடையில் ய் என்ற மெய்யெழுத்து தோன்றும்.
எ + கா: மணி (ண் + இ) + ய் + ஓசை = மணியோசை
மீதி இருக்கும் உயிரெழுத்துக்கள் நிலைமொழி இறுதியில் வந்து, வருமொழியுடன் புணரும்போது, வ் என்ற மெய்யெழுத்து இடையில் சேர்க்கப்படும்.
எ + கா: நிலா (ல் + ஆ) + வ் + ஒளி = நிலாவொளி
ஏ என்ற உயிரெழுத்து நிலைமொழி இறுதியில் இருந்து, அது வருமொழியுடன் புணரும்போது ய் மற்றும் வ் என்ற இரண்டு மெய்யெழுத்துக்களும் இணைக்கப்படலாம்.
எ + கா: சே (ச் + ஏ) + ய் + அடி = சேயடி
சே (ச் + ஏ) + வ் + அடி = சேவடி
எந்தெந்த உயிரெழுத்துக்களுக்கு எந்த உடம்படுமெய் பயன்படுத்தப்படும் என்பதை கீழே உள்ள படம் எடுத்துக்காட்டுகிறது. இ, ஈ, ஐ என்ற உயிரெழுத்துக்களுக்கு ய் என்ற உடம்படுமெய்யும் மற்றும் அ ஆ உ ஊ எ ஒ ஓ ஒள உயிரெழுத்துக்களுக்கு வ் என்ற உடம்படுமெய்யும் வரும். ஏ என்ற உயிரெழுத்துக்கு இரண்டு உடம்படுமெய்யும் பயன்படுத்தலாம்.

உயிர்முன் மெய் புணர்தல் (உயிர் +மெய்)
நிலைமொழி இறுதியில் உயிரெழுத்து வந்து, வருமொழி முதலின் க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்களுடன் புணரும்பொழுது, வருமொழியில் உள்ள அந்த மெய்யெழுத்து இன்னொரு தடவை தோன்றி நிற்கும்.
எ + கா: பள்ளி + க் + கூடம் (க் + ஊ) = பள்ளிக்கூடம்
சில சொற்களை பொறுத்து அவற்றின் இன மெல்லினம் ஆகிய ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெய்யெழுத்துக்கள் தோன்றலாம்.
எ + கா: மா + ங் + காய் (க் + ஆ) = மாங்காய்