வழுநிலை
வழு என்பது பிழையான அல்லது குற்றமுடைய பேச்சும் எழுத்தும் வழு எனப்படும்.ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
வழுநிலை வகைகள்:
வழுநிலை ஏழு வகைப்படும். அவை,
திணைவழு
பால்வழு
இடவழு
காலவழு
வினாவழு
விடைவழு
மரபுவழு
1. திணைவழு: ஒரு திணைச்சொல்லை மற்றோரு திண்ணைச் சொல்லால் சொல்வது திணைவழு எனப்படும். உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது திணைவழுவாகும்.
எ.கா:
அ. முருகன் வந்தது (உயர்திணை எழுவாய் ‘முருகன்’ அஃறிணைப் பயனிலையைக் ‘வந்தது’ கொண்டு முடிந்தது)
ஆ. பசு வந்தாள் (அஃறிணை எழுவாய் ‘பசு’ உயர்திணைப் பயனிலையைக் ‘வந்தாள்’ கொண்டு முடிந்தது)
எனவே இவ்விரு தொடர்களும் திணைவழுவாயிற்று.
2. பால்வழு: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐவகைப்பாலும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது பால்வழுவாகும்.
எ.கா:
அ. மாறன் வந்தாள்(ஆண்பால் எழுவாய் ‘மாறன்’ பெண்பால் பயனிலை ‘வந்தாள்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று
ஆ. தேன்மொழி வந்தான்(பெண்பால் எழுவாய் ‘தேன்மொழி’ ஆண்பால் பயனிலை ‘வந்தான்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
இ. மாணவன் தந்தார். (ஆண்பால் எழுவாய் ‘மாணவன்’ பலர்பால் பயனிலை ‘தந்தார்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
ஈ. மாடுகள் மேய்ந்தது. (பலவின் பால் எழுவாய் ‘மாடுகள்’ ஒன்றன் பால் பயனிலை ‘மேய்ந்தது’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
உ. ஆடு மேய்ந்தன. (ஒன்றன் பால் எழுவாய் ‘ஆடு’ பலவின் பால் பயனிலை ‘மேய்ந்தன’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
3. இடவழு: தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகை இடமும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது இடவழுவாகும்.
எ.கா:
அ. நான் உண்டாய் (தன்மை ஒருமைப்பெயர் ‘நான்’ முன்னிலைப் பயனிலையைக் ‘உண்டாய்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
ஆ. நீங்கள் உண்டோம். (முன்னிலை பன்மைப்பெயர் ‘நீங்கள்’ தன்மைப் பயனிலையைக் ‘உண்டோம்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
இ. அவர்கள் உண்டீர்கள்.(படர்க்கை பன்மைப்பெயர் ‘அவர்கள்’ முன்னிலைப் பயனிலையைக் ‘உண்டீர்கள்’ கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
4. காலவழு: இறந்தகாலம் , நிகழ்காலம், எதிர்காலம் என மூவகைக் காலமும் ஒன்றோடொன்று மயங்கி(மாறி) வருவது கால வழுவாகும்.
எ.கா:
அ. நான் நேற்று வருவேன். ('நேற்று' என்னும் இறந்தகாலப் பெயர் 'வருவேன்' என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
ஆ. இன்று வருவேன். ('இன்று' என்னும் நிகழ்காலப் பெயர் 'வருவேன்' என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
இ. நாளை வந்தேன்.('நாளை' என்னும் எதிர்காலப் பெயர் 'வந்தேன்' என்னும் எதிர்கால வினைமுற்றைக் கொண்டு முடிந்ததால் வழுவாயிற்று)
5. வினாவழு: அறுவகை வினாக்கள் மயங்கி(மாறி) வருவது வினாவழுவாகும்.
எ.கா:
அ. கறக்கின்ற மாடு பசுவோ எருதோ?. (கறக்கின்ற என்னும் குறிப்புச்சொல்லால் கறக்கின்ற மாடு பசு என்பது உறுதியாகிய பின்னும் பசுவோ எருதோ? என ஐயம் கொண்டு வினவுவது வழுவாகும். மேலும் எருது கறப்பதில்லை எனவே ஐயவினா வினவியது வழுவாகும்)
6. விடைவழு: வினாவிற்குப் பொருந்தா விடை பகர்தல் விடைவழுவாகும். இதனைச் செப்புவழு என்றும் கூறுவர்
எ.கா:
அ. பருப்பு வாங்கி வருவாயா?. என்னும் வினாவிற்குச் 'செருப்பு விலை அதிகம்' என்று விடை பகர்தல் விடைவழுவாகும்.
7. மரபுவழு: மரபுத்தொடர்கள் மயங்கி(மாறி) வருவது மரபு வழுவாகும். முறைமைக்கு மாறாகத் தொன்றுதொட்டு வழங்கிவரும் மரபிலிருந்து மாறி வருவது மரபுவழு ஆகும்.
எ.கா:
அ. குயில் குளறும். ('குயில் கூவும்' என்பதே சரியான ஒலிமரபுத்தொடராகும். 'குளறும்' என்று வந்ததால் வழுவாயிற்று)
ஆ. தென்னை இலை.('தென்னை ஓலை' என்பதே சரியான சினைமரபுத் தொடராகும். 'இலை' என்று வந்ததால் மரபு வழுவாயிற்று.)
வழாநிலை:
வழா என்றால் குற்றம் இல்லாமல் அல்லது பிழை இல்லாமல் ஆகும். ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது இலக்கண முறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.
வழாநிலை எடுத்துக்காட்டு

வழுவமைதி:
வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை,
திணைவழுவமைதி
பால்வழுவமைதி
இட வழுவமைதி
கால வழுவமைதி
மரபு வழுவமைதி
1. திணைவழுவமைதி: உயர்திணை எழுவாய் அஃறிணைப் பயனிலையையும், அஃறிணை எழுவாய் உயர்திணைப் பயனிலையையும் கொண்டு முடியும் சில இடங்கள் வழக்காக அமையும் போது அது திணைவழுவமைதி ஆகும். இவை உயர்வு, உவப்பு,மிகுதி, இழிவு, சினம், சிறப்பு போன்ற காரணமாகத் திணைவழு, திணைவழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
எ.கா:
அ. ஒரு பசுவை “லட்சுமி வந்து விட்டாள்” - இது திணைவழுவாக இருப்பினும் உவப்பு காரணமாக இதை திணைவழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆ. நம்பியும் காளையும் சென்றனர். (இங்கு நம்பி உயர்திணை, காளை அஃறிணை இரு திணைகளும் விரவி வரும் போது உயர்வு கருதி சென்றனர் என்னும் உயர்திணைச் சொல் பயனிலைவந்தது.
இ. யானை, குதிரை, தேர், காலாள் படை வந்தன - மிகுதி கருதி அஃறிணைப் பயனிலை வந்தன வந்தது
ஈ. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா - இழிவு கருதி அஃறிணைப் பயனிலை வந்தது.
உ. எவன் ஒரு மரம் - இதில் சினம் காரணமாக ஒருவனை மரத்துடன் ஒப்பிடப்படுகிறது
ஊ. தம்பொருள் என்பர் தம்மக்கள்- இதில் சிறப்பு காரணமாக அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்படுகிறது.
2.பால்வழுவமைதி: ஒரு பாற்சொல், மற்றொரு பாற்சொல்லாக வருவது பால்வழுவமைதி எனப்படும். இவை மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு போன்ற காரணங்களால் எழுவாயும் பயனிலையும் பால் மயங்கி வரும்.
எ.கா:
அ. மகிழ்ச்சியின் காரணமாக தன்மகளை “வாடா, செல்லம்” என்று தாய் ஆண்பால் விளி கொண்டு அழைப்பது
ஆ. மாமா வந்தார்- உயர்வு கருதி பலர்பால் பயனிலை வந்தது
3. இட வழுவமைதி: தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களில் வெவ்வேறு இடங்கள் கலந்து வரும் போது ஏதாவது ஓர் இடத்திற்குரிய பயனிலையைக் கொண்டு முடிதல் இடவழுவமைதி ஆகும்.
எ.கா:
அ. நானும் நீயும் செல்கிறோம் - தன்மை ஒருமை, முன்னிலை ஒருமை ஆகிய இடங்கள் தன்மைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது
ஆ. அவனும் நீயும் செல்கிறீர்கள் - படர்க்கை ஒருமை, முன்னிலை ஒருமை இடங்கள் முன்னிலைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது.
இ. நானும் அவனும் செல்கிறோம் - தன்மை ஒருமை,படர்க்கை ஒருமை ஆகிய இடங்கள் தன்மைப் பன்மை இடத்தைக் கொண்டு முடிந்தது.
4. கால வழுவமைதி: முக்காலங்களையும் ஒன்றை வேறொன்றாகக் கூறுவது வழுவமைதி ஆகும். விரைவு, மிகுதி, தெளிவு என்னும் மூன்று காரணங்களுக்காகவும் இக்காரணங்கள் இல்லாமலும் காலங்கள் மயங்கி வந்தாலும் வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
எ.கா:
அ. நண்பா விரைந்துவா என்று அழைக்குமிடத்து, வீட்டினுள் இருப்பவன் “இதோ வந்துவிட்டேன்” என்று கூறுவது - எதிர்காலத்தில் கூறவேண்டியதை விரைவு கருதி இறந்தகாலத்தில் கூறுகிறான்
ஆ. நாளை ஊருக்கு செல்கிறேன் - உறுதியாகச் செல்லவிருப்பதால் தெளிவு கருதி எதிர்காலப்பெயர் நிகழ்கால த்தைக் கொண்டு முடிந்தது
இ. சிறுவயதில் இங்குதான் விளையாடுவோம் - இறந்தகாலம் எதிர்காலப்பயனிலையைக் கொண்டு முடிந்தது
ஈ. வெள்ளி தோறும் கோவிலுக்குப் போவோம் - முக்காலமும் நடைபெறும் தொழில் இறந்தகாலத்தைக் கொண்டு முடிந்தது
ஊ. கதிரவன் கிழக்கில் தோன்றுகிறது - முக்காலமும் நடைபெறும் தொழில் இறந்தகாலத்தைக் கொண்டு முடிந்தது முக்காலத்திலும் தொடர்ந்து தன் தொழிலைச் செய்யும் பொருள்களை நிகழ்காலத்தில் குறிப்பிடுவதும் கால வழுவமைதி ஆகும்.
5. மரபு வழுவமைதி: முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது மரபு ஆகும். மரபுத்தொடர்கள் மயங்கி வரினும் மரபுவழுவமைதியாக் கொள்ளப்படும்.
எ.கா:
அ. கத்தும் குயிலோசை எந்தன் காதினில் வந்து விழவேண்டும் - குயில் கூவும் என்பதே மரபு